search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள்"

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    குறிப்பாக, நெல் அதிகம் உற்பத்தியாகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் வாங்குவதற்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும், மாநில அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும் என நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, நெல் கொள் முதல் நிலையங்களில் குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,750 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த உயர்த்தப்பட்ட விலை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், பழைய விலையான ரூ.1,550 என்ற விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடி நெல் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய விவசாயிகள் தீர்மானித்து இருக்கின்றனர்.

    இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து அரிசியாக தந்துவிட்டு, நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி முதல் 59 நெல் கொள்முதல் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 49 நெல் கொள்முதல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.

    எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். தங்குதடையில்லாமல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

    மேலும் இதுகுறித்து அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை தொடர்ந்து, விவசாயிகளின் நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.



    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பொறுத்தவரை நாம் மத்திய அரசின் முகவராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இதில் சில விதிமுறைகள் இருக்கிறது. செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதாவது அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல்லுக்கு புதிய ஆதார விலை கொடுக்கப்படும். இதற் காக ஒரு மாத பராமரிப்பு காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எல்லா ஆண்டுகளிலும் மூடப்பட்டு இருக்கும். தாலுகாக்கள் உள்ள தலைமை இடங்களில் மட்டும் திறந்து இருப்பார்கள்.

    இந்த ஆண்டு வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைவாக இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அவசியம் கூடுதலாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தேவை ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த பகுதியில் எல்லாம் குறுவை அதிகமாக இருக்கிறதோ? எங்கெல்லாம் நெல்வரத்து அதிகம் இருக்கிறதோ?. அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.  #TNGovernment
    ×